ஒரு தினுசாத் தான் இருக்கீங்க..
முதலில் நண்பர் நந்தாவுக்கு என் நன்றி. என்னையும் இந்த வியர்டு விளையாட்டில் இழுத்து விட்டதற்கு.
ரொம்பத் தாமதமா வீட்டுப்பாடத்தை முடிச்சதுக்கு மன்னிக்கவும் நந்தா.. ஏன்னா போன வாரம் தான் எனக்கு பிரசவம் முடிஞ்சது ;-) . (இங்க Production Release in office! ;-)). அதனால தான் உடனடியா எழுத முடியல..
சரி.. நந்தா என்னுடைய கவிதைகேளுங்கள் வலைத்தளத்துக்கு தான் அழைப்பு விடுத்திருந்தார்.. ஆனா நான் ஏற்கெனவே என்னுடைய எண்ணங்களுக்குத் தகுந்தமாதிரி வலைப்பூக்களை உருவாக்கியிருப்பதால், அந்த வலைப்பூவைக் கவிதைகளுக்கு மட்டுமாய் விட்டுவிட்டு, இந்த BlogsOfRaghs ல் பதிவு செய்கிறேன். அதுவும் முதல் தமிழ்ப்பதிவுங்கோ.. இனிமே இங்கயும் தமிழ்ல தொடரலாம்னு இருக்கேன்.
சரி... ரொம்ப சுயபுராணம் சொல்லி போரடிச்சுட்டேனா.. மேட்டருக்கு வர்றேன்...
வியர்டான அதாவது வித்தியாசமான, கிறுக்குத்தனமான, வினோதமான பழக்கங்கள் என்கிட்ட இருக்கறது ஒண்ணொண்ணா (முடிஞ்சவரை மனசுக்குத் தோணுனதை) பட்டியலிடுகிறேன்...
நந்தா நீங்க 5 சொன்னீங்க.. நான் என்னவோ ஏழில் முடிக்கப்போய் அது பத்தாகி விட்டது ;-). எதுக்கு வெட்டி, ஒட்டிட்டுன்னு அத அப்பிடியோ விட்டுட்டேன்..
(1) காலரைப் பிடிச்சுக்கிட்டே தூங்குறது
சின்ன வயசுலருந்து இப்ப வரைக்கும் இந்தப் பழக்கம் இருக்குங்க.. அதாவது சட்டைக் காலரைப் பிடிச்சு அதோட நுனியை நோண்டுறது.. என்னமோ அதுல ஒரு அலாதி சுகம்.. முந்தியெல்லாம் ரொம்பச் சின்னப் புள்ளையா இருந்தப்ப, சட்டைக் காலரைப் பிடிச்சுக்கிட்டுத் தான் தூங்குவேனாம்.. பெரும்பாலும் அப்பா சட்டைக்கே முதலிடம்...
(2) பாடிட்டே இருக்கிறது
இதுல என்னடா இருக்குன்னு நெனக்கிறீங்களா? அதாவதுங்க.. பாட்டுங்கறது நமக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்.. ஒண்ணு பாடணும் இல்லாட்டி பாட்டுக் கேக்கணும்... நமக்குக் குரல்வளம் (!!?) கொஞ்சம் ஓஹோன்னு இருக்கறதால இந்த மேடையில பாடுறது, பாட்டுப்போட்டியில கலந்துக்குறது - இதெல்லாத்தயும் மனசளவுல வச்சுக்கிட்டு, ஏதாவது பாட்டு டிவிலயோ, ரேடியோவிலயோ ஓடும்போது கூடச் சேந்து பாடுறதுங்க.. அப்படியே நம்ம ராகம்,தாளம், சுருதி,பல்லவி - எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறதுங்க இலவசமாவே.;-) ஆனா பாருங்க இதுல என்னன்னா.. பழைய பாடல் இல்லாம புதுப்பாடல்கள் பெரும்பாலும் நமக்கு மனப்பாடங்கறதால டிவில பாட்டு வரும்போது நானும் கூட சேர்ந்து பாட ஆரம்பிச்சுருவேங்க.. ரொம்ப சத்தம் போட்டு எல்லாம் இல்லங்க.. மெதுவாத்தான்...ஆனாலும் யோசிச்சுப் பாத்ததேயில்ல கூட இருக்கவங்களப் பத்தி.. என்னோட அண்ணன் அடிக்கடி திட்டுவான்.. "எத்தன தடவ சொல்லியிருக்கேன் உனக்கு இப்படிக் கூடக்கூடப் பாடாதன்னு? ஏதோ ஒண்ணு ரெண்டு வரிங்களைப் பாடுனாக் கூட, சரி! புடிச்ச பாட்டு போல.. ஏதோ கூடச் சேந்து பாடுறான்னு விட்டுரலாம்...ஆனா இப்படி முழுப்பாட்டையும் பாடுனா கூட இருக்கவன் கதி என்னடா ஆகுறது?"ன்னு.. நானும் சரி சரின்னுட்டு அப்டியே லூசுல விட்டுட்டேன்.. இப்ப கொஞ்சம் வயசானதாலயோ என்னவோ அது என்னங்க மெச்சுரிட்டியா ஆங்.. அதனாலன்னு நெனக்கிறேன்.. அப்பப்ப என்னைய, என்னோட கலையார்வத்தை அடக்கிக்கிர்றேன்.. இருந்தாலும் அப்பப்ப அண்ணாத்தை எட்டிப்பார்த்துடுவாரு சில சமயங்கள்ல.. என்னங்க பண்றது.. அப்டியே போய்ட்டுருக்கு நம்ம வண்டி..
(3) ஒண்ணு ஒண்ணா மாத்தி மாத்தி
பாட்டுக் கேக்கறப்ப WinAmp , Windows Media Player இப்படி எந்த ஒரு ப்ளேயரில் பாட்டுப் போட்டாலும், பாட்டுக்களை ஒரு மாதிரி கலவையா அடுக்கி ஒண்ணு ஒண்ணா வைக்கிறது நமக்கு கைவந்த கலைங்க.. அதாவது ஒரே படத்துல வர்ற பாட்டு அடுத்தடுத்து வராமயும், சந்தோஷப் பாட்டு, சோகப் பாட்டு, குத்துப்பாட்டு எல்லாம் ஒண்ணு மாத்தி ஒண்ணா அடுக்கினா நல்ல கலவையா இருக்கும்ல... இல்லைன்னா ஒரே டிராக்கில் போற மாதிரி போரடிக்கும் கிற எண்ணத்தில தான் இப்படி .. ஹி ஹி ஹி..
(4) ராசி பாக்குறது
நண்பர் ஜி.ராகவன் சொன்னபடி நமக்கும் இந்த ராசி பாக்குறது உண்டுங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு மேல ஒவ்வொரு விதமான நம்பிக்கை, அபிப்ராயம் உண்டுங்க.. அத நீங்க செண்டிமெண்டுன்னு சொன்னாலும் சரி, மூடநம்பிக்கை இல்ல ராசி ன்னு வெச்சுக்கிட்டாலும் சரி, அவங்கவங்க அவங்களுக்குப் பிடிச்ச சில விஷயத்தை செஞ்சுக்கிட்டு தான் இருப்பாங்க....சரியா? நானும் கல்லூரிப்பருவத்தில பெரும்பாலும் பரீட்சைக்கு சில ராசி சட்டை, பேண்ட் வச்சிருந்தேனுங்க.. எல்லாப் பரீட்டைக்கும் அத மட்டுமே (!!) போட்டுட்டுப் போறதுங்க..என்னமோ அதப் போட்டுட்டு போய் பரீட்சை எழுதுனா நல்ல மார்க் வாங்குவோம்ங்க நம்பிக்கைங்க.. நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு தெரியுது. "ஆஹா.. அவந்தானா நீ.. அப்ப நீ இன்னும் அப்டியே தான் இருக்கியா.. திருந்தவேயில்லையா" ன்னு.. மேற்கூறிய அதே மெச்சுரிட்டினால, இப்பெல்லாம் அந்தளவுக்கு இல்லங்க..
(5) பந்தயம் வெச்சுக்கறது
எனக்குத் தெரிஞ்சு இது எத்தன பேருகிட்ட இருக்குன்னு தெரியாதுங்க.. சின்ன வயசுல நாலாப்பூவோ அஞ்சாப்பூவோ படிக்கயில ஆரம்பிச்சதுங்க.. ரோட்டுல போயிட்டு இருக்கும்போது கீழ கெடக்குற கல்லை எத்தி வெளையாடுற பழக்கமுங்க.. அப்ப திடீரூனு வேகமாப் போகணும்கறதுக்காக, மெதுவா எத்திக்கிட்டே வந்த கல்ல திடீரூன்னு வேகமா எத்தி, எதிர்த்தாப்புல வர்ற லாரியோ, காரோ, சைக்கிளோ அந்த வீட்டைத் தாண்டுறதுக்கு முன்னாடி நம்ம கல்லு அந்த வண்டியைத் தொட்டுப்புடணும்....அந்தத் தெருமுக்கைத் தொடறதுக்குள்ள நம்ம கல்லு இந்தத் தெருவைத் தாண்டிடணும்.. - அப்படி நெனச்சுக்கிட்டே கல்லை எத்திக்கிட்டு வர்றதுங்க.. சில சமயங்களில கொஞ்சம் ஓவராகி, இந்தக் கல்லு இப்ப தாண்டிருச்சுன்னா, நம்ம நெனச்சது நடக்கும்.. (இது எதுவேணா இருக்கலாங்க - நெனச்சது நடக்குறது).. ன்னு எல்லாம் கூட நெனச்சுக்கிறதுங்க.. இப்ப நெனச்சா சிரிப்பாத்தான் வருது ;-)
சில சமயங்களில் ரூபாக் காச (நாணயத்தை) சுண்டிப் போட்டு முடிவெடுப்போம்ல அது மாதிரி தான் இதுவும்..
(6) பொஸ்தகம் படிக்கறது
இது பொதுவா நெறயப் பேருகிட்ட இருக்கற பழக்கமுண்ணு நெனக்கிறேங்க.. அதாவது சாப்ட்டுகிட்டே படிக்கிறது.. தூங்கும் போது படிக்கறது.. பாத்ரூம் போகும் போது படிக்கிறது (அம்மா "டேய் சரஸ்வதியை ஏண்டா அங்க கொண்டு போற" ன்னு திட்டினாலும்).. சின்ன வயசுல ஒருநாள் ஒரு நாவல் படிச்சுட்டுருந்தேன்.. அப்ப திடீருன்னு அவசரமா வந்ததுனால, நாவலோட விறுவிறுப்பின் காரணமா, உள்ள கொண்டுபோய் படிச்சு முடிச்சுட்டுத்தான் வெளிய வந்தேன்.. (வந்து வீட்டில திட்டு வாங்கினது வேற விஷயம்.. தெரிஞ்ச விஷயம் தானே இதுல திட்டுறதுக்கு என்ன இருக்குன்னு கேக்குறீங்களா.. ரொம்ப நேரமா ஆளக்காணோமேன்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க...ஏன்னா நான் சொல்லாமக் கொள்ளாம தோட்டத்துல இருக்கற பாத்ரூமுக்கு போயிட்டதால). நமக்கு ஒரு நம்பிக்கை அல்லது எண்ணமுங்க.. அங்க இருக்கற நேரத்தை வீணாக்கக்கூடாதுன்னு.. எனக்குத் தெரிஞ்சு சில நண்பர்களோட ஒத்துப் போயிருக்குங்க..
இன்னொன்னு, நாவல் அல்லது கதைப் பொஸ்தகம் ஏதாவது படிச்சுக்கிட்டே தூங்கிட்டா, காலைல எழுந்திரிச்ச உடனே, மொத வேலையா அதப் படிச்சு முடிச்சுட்டுத்தான் வேற வேலையே பாக்குறது...ஆனா இது ஏனோ பாடப்புத்தகத்துல இருக்கறது இல்லங்க ;-)
(7) கண்ணு முழிக்கறது
நந்தா சொன்ன மாதிரி தான்.. பிரம்மச்சாரிகள் வாழ்க்கைக்கென்றே ஒதுக்கப்பட்ட எழுதப்படாத சாசனம்...திடீருன்னு ஒரு மூடு வந்துட்டா, ரொம்ப நேரம் டிவி பாக்குறது, இல்லாட்டி கணினியை நோண்டுறது.ன்னு அப்பிடியே ஒரு 3, 4 மணிவரை பொழுதப் போக்கிர்றது.. அப்புறம் காலைல லேட்டா எழுந்திருக்கிறது தான் வழக்கமாச்சே.. எழுந்திரிச்சு, "அடடா.. நேத்து ராத்திரி அப்படி ரொம்ப நேரம் முழிச்சிருக்கக் கூடாதோ.. அப்படி என்னடா தூக்கம் முழிக்க வேண்டியிருக்கு" ன்னு நம்மள நாமளே கேள்வி கேட்டுக்க வேண்டியது.. இதெல்லாம் அடுத்த தபா உக்கார்ற வரைக்கும் தாங்க.. மறுநாள் அலுவலகத்துக்கு போகணும்கறதுனால சிலசமயம் இதுங்கள்லாம் கொஞ்சம் அடங்கியிருக்குதுங்க்.. சனி, ஞாயிறு வந்துட்டா போதும்.. திருவிழாவைப் பாத்த சின்னப்புள்ள கணக்கா கெளம்பிருங்க இதுங்க பாட்டுக்கு… ம்ஹீம்.. கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு வர்றேங்க இப்பல்லாம்...
(8) நேரத்த மிச்சம் பண்றதுஇன்னொன்னு, ஒரு வேலை செய்யும் போது அதே நேரத்தில வேற வேலை ஏதாவது செய்றதுங்க...(Parallel Processing)னு ஆங்கிலத்துல சொல்வாங்க.. உதாரணத்துக்கு சொல்லணுமின்னா, நாம தூங்கறப்ப துணிகளை ஊற வைப்போம்.. அப்பத்தான் தூங்க எழுந்திரிச்ச உடன, துணிங்க எல்லாம் நல்லா ஊறியிருக்கும்.. துவைக்க வசதியாவும் இருக்கும்.. நாம் தூங்கற நேரத்தை எப்படி துணி ஊற வைக்கப் பயன்படுத்துறோமோ அப்படித்தாங்க..
நமக்குத் துணிங்க இஸ்திரி போடற நேரத்துல பாட்டுக் கேக்கறது, அலுவலகத்துல காலைல வந்து கணினியை உயிர்ப்பிச்ச உடன, காபி குடிக்கப் போறதுக்கு முன்னாடி Login பண்றது ஏன்னா அது கொஞ்சம் நேரம் எடுக்கும்.. காபி குடிச்சுட்டு வர்ற நேரத்துக்குள்ள இந்த வேலை முடிஞ்சிடும்..இல்லைன்னா அதுக்குன்னு ஆகற நேரத்தைத் தனியா, தண்டமாக் கழிக்கணுமேங்கற கவலை.. டீ குடிக்கறப்ப, டீ பேக்கை சுடுதண்ணியில ஊறவைச்சுட்டு, வாட்டர் கேன்ல தண்ணி ரொப்பறதுங்க.. ஏன்னா தண்ணி ரொம்பற நேரத்துக்கு டீ நல்லா சாறு இறங்கிடும்ல.. இல்லைன்னா அந்த நேரத்தைத் தனியா அதுக்குன்னு செலவழிக்கணும்ல.. நாமல்லாம் அப்பப்ப ப.சிதம்பரம் ரேஞ்சுக்கு ஒக்காந்து யோசிப்போம்ல... இந்த நேரத்துக்கு அதப் பண்ணிரலாம்.. அந்த நேரத்துக்கு இதப் பண்ணிரலாம்னு பட்டையக் கெளப்புறது போங்க...
(9) தகவல் சொல்றது
இதுவும் ஒரு வித்தியாசமான பழக்கமுங்க.. நம்ம நட்பு வட்டாரத்துல நமக்குச் சின்னதா 'தகவல் களஞ்சியம்' னு பேரு வச்சிட்டாய்ங்க.. ஒடனே பெருசா எதும் கற்பனை பண்ணிக்கிராதீங்க.. சினிமா , பாட்டு அல்லது நமக்குப் புடிச்ச விஷயங்களைப் பத்திப் பேச்சு வர்றப்போ, அது சம்பந்தமான பின்புல விஷயங்களை (Background Information) அப்பிடியே புட்டு வைக்கிறதுங்க.. உதாரணத்துக்கு ஒரு படம் அல்லது பாட்டுன்னா - அது எப்ப ரீலீஸ் ஆச்சு, யாரு டைரக்டரு, யாரு பாட்டு எழுதுனது, யாரு பாடுனது, யாரு இசை, அவருக்கு அது எத்தனாவது படம், எந்தப் படத்துக்கு முன்னாடி இது வந்தது , அத நான் எப்பப் பாத்தேன், யாரு கூடப் பாத்தேன், எங்க பாத்தேன், எந்த சூழ்நிலையில பாத்தேன்., எத்தனை மணிக்குப் பாத்தேன், எத்தனை தடவை பாத்திருக்கேன்.., என்ன சிறப்பம்சம், எதனால புடிச்சுருக்கு ...இப்படிப்பட்ட தகவல்களை.. ஆனா எல்லாப் படத்துக்கும் இல்லங்க.. நம்மளுக்கு புடிச்ச, கவனத்தை ஈர்க்கற எல்லாப் படங்களுக்கும் இந்த முக்கியத்துவம்..
நம்ம நண்பர்களை எப்ப முதல் முதல்ல பாத்தேன், அப்ப அவன் என்ன கலர் சட்டை போட்டிருந்தான், என்ன பேசினான். இப்படிப்பட்ட தகவல்களும் அடங்கும்.. நம்ம தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களும் உண்டுங்க (Technical aspects). ஆனால் எல்லாத்துலயும் ,எல்லாரப் பத்தியும் இல்லங்க.. முந்தி இதோட அளவு/விகிதம் ரொம்ப இருந்துச்சு.. இப்பல்லாம் புதுசா ரொம்ப கவனம் எடுத்து பதிவு செஞ்சுக்கிறது அவ்வளவா இல்லங்க.. அதுவா அமைஞ்சா உண்டு. என்னா நம்ம கொஞ்சம் அப்பப்ப பிசி ஆகிடுறோம்ல..(10) பேரு பாக்குறது
அட இது என்னய்யா இது -ன்னு நெனக்கிறீங்களா? நான் யாருகிட்ட கைப்பேசி (செல்போன்) வாங்கினாலும் (எனக்குத் தெரிஞ்சவங்க, நண்பர்கள் கிட்ட மட்டும்) உடனே அவங்க என் பேர எப்படி பதிஞ்சு வெச்சுருக்காங்க ன்னு பாப்பேங்க.. ஏன்னு தெரியல.. அது பாட்டுக்கு இருக்கு...
ஏன்னா முக்காவாசி நண்பர்கள் சுருக்கமா Raghs/Rags/Raghavan இப்படித்தான் வெச்சிருப்பாங்க.. வீட்டுல இருக்கறவங்க இல்ல சொந்தக்காரங்களா இருந்தா Saravanan/ Saro இப்பிடி வச்சிருப்பாங்க.. இதுல ஒரே ஒருத்தன் தான் எனக்கும் என் பேருக்கும் முழுமரியாதை தந்து என் பேரை முழுசா Raghavan alias Saravanan -ன்னு பதிவு செஞ்சிருந்தான்.. (அவன் பேரு ஸ்ரீராம் - என் கல்லூரி வகுப்பு நண்பன் - புனேயிலிருந்து இப்போ அமெரிக்காவில் இருக்கான்).. அப்ப ஒரு சந்தோசம் இருந்தது பாருங்க.. அதெல்லாம் அனுபவிச்சாத் தான் தெரியுமுங்க...
=============
ரொம்ப கடைஞ்செடுத்துட்டேனா.. என்னமோ போங்க.. ஏதோ என்னால முடிஞ்சவரை சில குணாதிசயங்களைப் பட்டியலிட்டுருக்கேங்க... எங்கயாவது நான் உங்கள மாதிரி இல்ல நீங்க கேள்விப்பட்ட ஆளுங்களோட ஒத்துப்போகிற மாதிரி சில குணாதிசயங்களை இங்க விவரிச்சிரிந்தேன்னா, பின்னூட்டம் இட்டுட்டுப் போங்க (இல்லாட்டியும் பரவால்ல ;-)).
உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.. இனி, நந்தா நமக்குச் செஞ்ச மாதிரி, நாமளும் யாரயாவது மாட்டி விடணுமா? ஒரு பக்கம் " என்ன இது சின்னப்புள்ளத்தனமா ,, ராஸ்கல்"-ன்னு தோணுனாலும், " எல்லாருக்குள்ளயும் ஒரு சின்னப்புள்ள மனசு ஒளிஞ்சுக்கிட்டுத்தான இருக்கு. இன்னுமா சும்மாயிருக்க கைப்புள்ள..கெளம்புடா " அப்டிங்கறான் உள்ளார இருக்கிற ஒரு கருஞ்சிறுத்தை..நான் என்னங்க பண்றது.. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்"-ங்கிறது சில இடங்களில் பொருந்தினாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" - ங்கிறதும் ரொம்ப இடங்களில் நல்லாப் பொருந்துதே ;-)
ஆக, நானும் அழைப்பு விடுக்கிறேன்.. (சில காணாமல் போன அன்பர்களைத் திரும்ப இழுத்துவரும் முயற்சி). நந்தா எனக்குச் செய்தது மாதிரி.. ஹா ஹா ஹா.. அதனால் என் மானத்தக் காப்பாத்துவீங்கன்னு நம்பறேன் நண்பர்களே..
1. விழியன் (தல.. உங்களுக்கென்ன.. புகுந்து வெளாடுவீங்க)
2. பொன்னரசி (முடிஞ்சா தமிழ்ல இல்லாங்காட்டி ஆங்கிலத்துலயே அம்மணி)
3. சீனு (நீங்க ஒரு பதிவு கூடப் போடலங்க.. கண்டிப்பா இதுக்கு நீங்க ஒரு பதிவு போட்டே ஆகணும். என்னோட அன்பு வேண்டுகோள்)..
4.பாஸிட்டிவ் ராமா (இவரோட பேரே எல்லாரையும் இழுத்துருதுங்க.. அண்ணா அவசியம் கவனிக்கவும்)
5. கோ. கணேஷ்.. (ரொம்ப நாளா ஆளே காணோமே.. யாராச்சும் அவர இங்க இழுத்துட்டு வாங்கப்பா)..
6. பத்மப்பிரியா (இருக்கீங்களா நீங்க?.. இருந்தா வாங்க.. வருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு)..
7. ஜி. கே (கண்டிப்பா இவன் கலக்கிருவான்...பெரிய ஆளுங்க)
உங்களால எப்ப முடியுமோ அப்ப, எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதுங்க ப்ளீஸ்..வர்ட்ட்ட்டா......
Labels: wierd
At Thursday, April 12, 2007 8:33:00 AM, Raghavan alias Saravanan M
@ponnarasi,
//Haya haya haya! Thanku for the tag! :D //
My pleasure..
//And 1st weird is sweet ;) //
all copyrights enakku thaan okie ;-)?
//Intha Cell phone mater enakum aasa than! But have not done! :) //
why not? try it na.. okay i shall give my phone when we meet!! ;-)
//Raasi pakrathu is intersting... //
நான் சொன்னபடி நிச்சயமா பெரும்பாலானோரிடம் இருக்குங்க இது. ஆனா என்ன நெறயப் பேரு வெளில சொல்லிக்க மாட்டாங்க..
உங்க பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.. சரியா?